இளைஞர்கள் செய்யும் குற்றத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு


இளைஞர்கள் செய்யும் குற்றத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு
x

போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் செய்யும் குற்றத்தால் நாட்டின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

போதைக்கு அடிமையாகி இளைஞர்கள் செய்யும் குற்றத்தால் நாட்டின் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

விழிப்புணர்வு பேரணி

புதுச்சேரி காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் இன்று காலை நடந்தது.

ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் அருகே தொடங்கிய ஊர்வலத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

அடியோடு ஒழிக்க வேண்டும்

புதுச்சேரியில் தற்போது போதைப்பழக்கத்திற்கு இளம் வயதினர் அடிமையாகி வருகின்றனர். படிக்க வேண்டிய இளம் வயதில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் வாழ்க்கையை வீணாக்கி வருகின்றனர். இது போன்ற தீய பழக்கவழங்கங்களுக்கு அடிமையாகி இருப்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை அடியோடு ஒழிக்க வேண்டியது அவசியம்.

அரசு எத்தனை கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் இது போன்ற விழிப்புணர்வு முக்கியம். போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதை பிள்ளைகள் தெரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்களும் இதனை தெரிந்துகொண்டு பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். ஏனென்றால் போதைப்பொருட்கள் உட்கொள்ளும் பிள்ளைகளின் உடல்நலம் கெடுவதோடு, அவர்கள் செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது

போதைப்பொருட்களுக்கு அடிமையான பிள்ளைகள் செய்யும் குற்றங்களானது, அவர்களே தங்களை அறிந்து கொள்ள முடியாத நிலையில் செய்வதை சில நேரங்களில் உணர முடிகிறது. போதைப்பொருட்கள் உள்கொள்வதன் மூலம் ஏற்படும் உணர்வு என்பது, சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்றாக உள்ளது. அந்த நிலையில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் இருப்பதாக மற்றவர்கள் கூறுவது மிகவும் வருத்தப்பட வேண்டியதாகும்.

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்கள் செய்யும் குற்றங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை அவர்கள் உணரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த பேரணி பயனுள்ளதாக இருக்கும். படிக்க வேண்டிய வயதில் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையை நன்றாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வர வேண்டும். போதைப்பொருளுக்கு எதிராக காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதன் மூலம் அவர்கள் இந்த பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும். போதைபழக்க வழக்கத்திற்கு ஆளாக்கும் முக்கிய நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

200 போலீசார்

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஆனந்த மோகன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்வாதி சிங், பக்தவச்சலம், மாறன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ஜெய்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வலம் வழுதாவூர் சாலை, குண்டுசாலை, மூலக்குளம், ரெட்டியார்பாளையம், அரும்பார்த்தபுரம், வில்லியனூர் புறவழிச்சாலை, கூடப்பாக்கம், இந்திராகாந்தி சிலை சதுக்கம், மரப்பாலம், முருங்கப்பாக்கம், அரியாங்குப்பம் வரை சென்று திரும்பி முருங்கப்பாக்கம், மரப்பாலம், உப்பளம் சாலை, சோனாம்பாளையம் சந்திப்பு வழியாக கடற்கரை சாலையில் முடிவடைந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.


Next Story