இளம் தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை


இளம் தலைமுறையினருக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை
x
தினத்தந்தி 26 Oct 2023 5:45 PM GMT (Updated: 29 Oct 2023 9:12 AM GMT)

இளம் தலைமுறையினருக்கு சினிமா நட்சத்திரங்களை தெரிந்த அளவுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை தெரியவில்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்தார்.

புதுச்சேரி

'என் மண், என் தேசம்'

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இருந்து 'என் மண், என் தேசம்' இயக்கம் என்ற பெயரில் மண், அரிசி சேகரித்து டெல்லியில் நினைவு தூண் மற்றும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதன்படி 'என் மண், என் தேசம்' இயக்கம் சார்பில் புதுவையில் இல்லம்தோறும் ஒரு பிடி மண், ஒரு பிடி அரிசி தானமாக பெறப்படும் நிகழ்ச்சி 139 கிராமத்திலும், 108 கிராம பஞ்சாயத்திலும், 5 நகராட்சியிலும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரை நடந்தது. அவை அனைத்தும் ஒருங்கிணைத்து டெல்லிக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

மண் சேகரிக்கப்பட்ட அமிர்த கலச யாத்திரை ஒருங்கிணைக்கும் நிகழ்வு இன்று கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு அமுத கலசத்துடன் டெல்லிக்கு செல்லும் தன்னார்வலர்களின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-

சுதந்திர போராட்டம்

சுதந்திர போராட்டத்தில் புதுச்சேரி முக்கிய பங்கு வகித்தது. இதற்காக வரலாறு உள்ளது. பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், ஆஷ் துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன், அரவிந்தர் ஆகியோர் புதுச்சேரியில் இருந்து சுதந்திரப் போராட்டத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். வாஞ்சிநாதன் இங்கு இருந்து தான் துப்பாக்கி பயிற்சி பெற்றுள்ளார்.

புதுச்சேரி விடுதலைப் போராட்டங்கள் பற்றிய பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் அதில் பல முரண்பாடுகள் இருக்கிறது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அனைத்தையும் வெளிப்படையாக பேசமுடியாது. பல நிகழ்ச்சிகள் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அவை பேசப்படாமல் இருந்து விடக்கூடாது.

புத்தகமாக வெளியிட வேண்டும்

புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறைக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். விடுதலைப் போராட்டத்திற்காக புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களும், அதற்கு பங்காற்றிய வீரர்களை பற்றிய முழு தகவலையும் ஒன்றிணைத்து ஒரு புத்தகமாக தொகுத்து அதனை ஒரு தேசிய நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்-அமைச்சர் கரங்களால் வெளியிட வேண்டும்.

இன்றைய இளம் தலைமுறைக்கு சினிமா நட்சத்திரங்களை பற்றி தெரிந்த அளவுக்கு சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி தெரியவில்லை. அவர்கள் எத்தகைய தியாகங்களை செய்து, இந்த நாட்டிற்கு உழைத்தார்கள் என்பதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களைப் பற்றி அதிகம் படித்து தெரிந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உறுதிமொழி

விழாவில் ஜான்குமார் எம்.எல்.ஏ., கலை பண்பாட்டு துறை செயலாளர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக நாட்டின் வளர்ச்சிக்கு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.


Next Story