அரசு பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் நட்டுகள் கழன்று ஓடியதால் பரபரப்பு


அரசு பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் நட்டுகள் கழன்று ஓடியதால் பரபரப்பு
x

காரைக்காலில் புதுச்சேரி அரசு போக்குவரத்து பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் 4 நட்டுகள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

காரைக்கால்

காரைக்காலில் புதுச்சேரி அரசு போக்குவரத்து பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் 4 நட்டுகள் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

அரசு பஸ்

புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ் (பி.ஆர்.டி.சி.) காரைக்கால் பஸ் நிலையத்தில் இருந்து அம்பகரத்தூர் நோக்கி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சேத்தூர் பகுதியை கடக்கும்போது, பஸ்சின் வலது புறம் இருந்த முன் சக்கரத்தில் இருந்து நட்டுகள் கழன்று சாலையில் ஓடின.

இதனால் முன்பக்க டயர் வலைந்து நெளிந்து ஓடியதை பார்த்து டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். சுதாரித்துக் கொண்ட அவர் உடனடியாக பஸ்சை சாலையோரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது முன்பக்க சக்கரத்தில் 4 நட்டுகள் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீதம் இருந்த 4 நட்டுகளில் 2 கீழே விழும் நிலையில் பாதியில் இருந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நட்டுகள் கழன்று சாலையில் ஓடியவுடன் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலையோரமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இல்லையெனில் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

பணிமனையில் பஸ்சை முறையாக பரிசோதனை செய்யாததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு காரணமான சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டயர் வெடித்தது

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் நாகப்பட்டினம் சென்ற மற்றொரு புதுச்சேரி அரசு பஸ்சின் முன் பகுதியில் திடீரென குண்டு வெடித்ததுபோல் சத்தம் கேட்டு, டிரைவர் மற்றும் பயணிகள் பதறிபோயினர். தொடர்ந்து, கீழே இறங்கி பார்க்கும் போது, முன்சக்கர டயர் வெடித்து சிதறி கிடப்பது தெரியவந்தது. அப்போதும் டிரைவரின் சாதுரியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.

எனவே அரசு போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் பஸ்களை முறையாக பழுதுநீக்கவும், ஓட்டை, உடைசலான பஸ்களை ஒதுக்கி விட்டு புதிய பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோக்கள்

போக்குவரத்து துறை அமைச்சரின் பொறுப்பில் உள்ள காரைக்காலில் 32 பஸ்கள் ஓடவேண்டிய இடத்தில் வெறும் 16 பஸ்கள் மட்டுமே இயங்குகிறது. அந்த பஸ்களும் பல ஓட்டை உடைசலாக இருக்கின்றன. பயணிகளின் உயிருக்கு உலை வைக்கும் உள்ள பஸ்களை சீரமைத்து இயக்காமல, புதிய பஸ்கள் வாங்க போவதாக அமைச்சர் பேசிவருவது வேடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். மேலும் ஓட்டை உடைசலாக இயக்கப்படும் பஸ்களை இணைத்து வீடியோவாகவும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-----


Next Story