தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு


தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x

4 வழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாகூர்

4 வழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 வழிச்சாலை அமைக்கும் பணி

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே ரூ.6 ஆயிரத்து 431 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

பாகூர் அடுத்த சோரியாங்குப்பம் நவாத்தோப்பு என்ற இடத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க முடிவு செய்தனர். இந்த இடம் சோரியாங்குப்பம் செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் அறங்காவல் குழுவிற்கு சொந்தமானதாக கூறப்படுகிறது.

அந்த வழியாக சாலை அமைப்பதால் அதற்கான தொகை இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைத்ததாக தெரிகிறது. இருப்பினும் அறங்காவல் குழுவினர் இந்த பணத்தை கேட்டு இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கிராம மக்கள் எதிர்ப்பு

இந்த நிலையில் இன்று காலை நவாத்தோப்பு பகுதியில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தை ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணியை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீர்த்தவாரி மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் கோவிலுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்கினால் மட்டுமே பணியை செய்ய விடுவதாக தெரிவித்தனர். மேலும் அரசு மற்றும் இந்து அறநிலையத்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் பாகூர் தாசில்தார் பிரிதிவி, இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கிரம மக்களின் கோரிக்கையை இந்து அறநிலைத்துறை ஆணையரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் தீர்த்தவாரி மண்டபம் இ்டிக்கும் பணிகள் தொடங்கின. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story