புதிய அமைச்சருக்கான பரிந்துரை உள்துறைக்கு அனுப்பப்பட்டதா?


புதிய அமைச்சருக்கான பரிந்துரை உள்துறைக்கு அனுப்பப்பட்டதா?
x

சந்திர பிரியங்கா ராஜினாமாவால் காலியான அமைச்சர் பதவி இடத்தை நிரப்ப உள்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது.

புதுச்சேரி

சந்திர பிரியங்கா ராஜினாமாவால் காலியான அமைச்சர் பதவி இடத்தை நிரப்ப உள்துறைக்கு பரிந்துரை அனுப்பப்பட்டதாக பரபரப்பு தகவல் பரவி வருகிறது.

ராஜினாமாவால் பரபரப்பு

புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரான சந்திர பிரியங்கா திடீரென தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அத்துடன் தனது தொகுதி மக்களுக்கு எழுதிய கடிதத்தில் சாதிய, பாலின ரீதியாக தாக்குதலுக்கு உள்ளானேன் என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் காலியாகும் இடத்துக்கு பெரும்பான்மையினரான வன்னியர் அல்லது ஆதிதிராவிட சமுதாயத்தினரை நியமிக்க வேண்டும். மக்கள் ஆதரவில்லாத பணத்திமிர் பிடித்தவர்களுக்கு கொடுத்து விடக்கூடாது என்றும் கொளுத்தி போட்டிருந்தார். சந்திர பிரியங்காவின் இந்த அதிரடி புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பகிரங்க மோதல்

காரைக்கால் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 5 தொகுதிகளில் சந்திர பிரியங்கா (நெடுங்காடு (தனி)), திருமுருகன் (காரைக்கால் வடக்கு) ஆகியோர் மட்டுமே என்.ஆர்.காங்கிரசில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். 2 தொகுதிகளில் தி.மு.க.வும், சுயேச்சை ஒருவரும் எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். தேர்தலில் ஆட்சியை பிடித்து அமைச்சரவையில் சந்திர பிரியங்கா இடம் பெற்றதில் இருந்தே அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் புறக்கணித்து வந்தனர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி பிறந்த நாளின் போது பேனர்கள் வைப்பத்தில் இருதரப்பினரும் பகிரங்கமாக மோதிக் கொண்ட சம்பவமும் அரங்கேறியது. தொடர்ந்து சந்திர பிரியங்காவுக்கு எதிரான நடவடிக்கைக்கு காத்திருந்தது போல் அவர் ராஜினாமா அறிவிப்பு வெளியான நிலையில் எதிர்தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

எதற்கு முக்கியத்துவம்?

இந்தநிலையில் காலியான அமைச்சர் பதவியை பிடிக்க என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பகிரத பிரயத்தனம் செய்து வருகிறார்கள். குறிப்பாக சந்திர பிரியங்கா ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அதே சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுமா அல்லது காரைக்கால் மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படுமா? என பட்டிமன்றமே நடந்து வருகிறது.

இதற்கிடையே அமைச்சர் பதவியை குறிவைத்து காரைக்கால் வடக்கு எம்.எல்.ஏ. திருமுருகன் கடந்த வாரம் புதுவையில் முற்றுகையிட்டார். இதற்கு பலனும் கிடைத்ததாக என்.ஆர். காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது. அதாவது, நேற்று முன்தினம் கோரிமேட்டில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொண்ட திருமுருகனுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி எலுமிச்சம் பழம் பிரசாதம் வழங்கி ஆசீர்வதித்தார்.

விரைவில் அறிவிப்பு

இதை வைத்து அமைச்சர் பதவி உறுதியாகி விட்டதாக திருமுருகனின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர். எது எப்படியானாலும் புதிய அமைச்சர் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில் ஏற்கனவே அதற்கான கடிதத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் சந்திப்பின் போது கொடுத்து விட்டதாகவும் உள்துறை அனுமதிக்காக அதை கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரத்தின் பதவி பறிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னரே அந்த அமைச்சர் பதவியை பி.ஆர்.சிவாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.

ஆனால் இந்த முறை அதுபோல் தற்போது நடக்க வாய்ப்பு இல்லை. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் புதிய அமைச்சர் யார்? என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும் என்று அரசு வட்டாரத் தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.


Next Story