பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுத்தது யார்?

புதுவையில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்று அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி
புதுவையில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுத்தது யார்? என்று அன்பழகன் கேள்வி எழுப்பினார்.
புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தள்ளாட்டம்
புதுவையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுபான கொள்கையில் தள்ளாட்டத்துடன் இருக்கிறது. போதுமான வருவாய் இல்லாத நிலையில் மதுபான கொள்கையில் சரியான நடவடிக்கை எடுத்தால் ஆண்டுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கும். குறிப்பிட்ட ஒரு சிலருடைய நன்மைக்காக திட்டமிட்டு வரவேண்டிய வருவாயை அரசு தொடர்ந்து இழந்து வருகிறது.
புதுவையில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் தயாராகும் மதுபானங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வரும் மதுபானங்களை அரசே கொள்முதல் செய்து அதற்காக தனி கார்ப்பரேசன் அமைத்து வினியோகம் செய்தால் ரூ.1000 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும்.
ரெஸ்டோ பார்
கடந்த 1989-ம் ஆண்டு மொத்த மதுபான விற்பனை கடை 80, சில்லரை மதுபான விற்பனை கடை 250-க்கு அரசால் லைசென்சு வழங்கப்பட்டது. அதன்பின் தனியாருக்கு மதுபான விற்பனை லைசென்சு வழங்கப்படவில்லை. மேலும் சுற்றுலாவை காரணம் காட்டி கடந்த காங்கிரஸ்-தி.மு.க. ஆட்சியில் 55 லைசென்சுகளும், தற்போதைய அரசில் 95 லைசென்சுகளும் (ரெஸ்டோ பார்) வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு ஒரு லைசென்சுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.10 கோடிதான் வருமானம் கிடைக்கிறது. அதே நேரத்தில் புதியதாக 100 மதுபான கடைகளுக்கு லைசென்சு வழங்க ஏலம்விட்டாலே குறைந்தது ஆண்டுக்கு ரூ.200 கோடி வருமானம் வரும்.
அனுமதி கொடுத்தது யார்?
முதல்-அமைச்சரின் கண்ணோட்டத்தில் மாற்றம் தேவை. கடந்த சில நாட்களாக பெண்களுக்கு தனி மதுபார், பீர் பஸ் இயக்கம் குறித்து விளம்பரப்படுத்தி உள்ளனர். கலால் சட்டப்படி இது தவறு. அப்படியானால் கலால்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கலால்துறை சார்பில் பீர் பஸ்சுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் அதற்கு அனுமதி கொடுத்தது யார்? இதுகுறித்து அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
பேட்டியின்போது அவைத்தலைவர் அன்பானந்தம், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், துணை செயலாளர் நாகமணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.