அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்


அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்
x

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்துவேன் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மாநில அந்தஸ்து கிடையாது

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு, மாநில அந்துஸ்து பெற்றுத்தருவோம் என ஒவ்வொரு தேர்தலின்போதும் அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளித்து ஓட்டு வேட்டையாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இது 25 ஆண்டுக்கும் மேலாக தொடர்கிறது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் மாநில அந்தஸ்து கோரிக்கையை நிறைவேற்றுவோம் என வாக்குறுதியுடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. சொன்னபடி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு ஏற்க மறுத்ததுடன், மாநில அஸ்தஸ்து வழங்க முடியாது என்றும், புதுச்சேரி யூனியன் பிரதேசமாகவே தொடரும் எனவும் கடிதம் அனுப்பியுள்ளது. மத்திய அரசின் இந்த செயல், ஆளும் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முதல்- அமைச்சர் ரங்கசாமி நேற்று சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசு அனுப்பி வைத்தோம். ஆனால் மத்திய அரசு தற்போதைய நிலையே தொடரும் என கூறியுள்ளது. இந்த நிலைப்பாடு எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.

மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவேன். புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களை சேர்ந்த பகுதிகள் தான் புதுச்சேரி. மறுபடியும் மத்திய அரசை நேரடியாக சந்தித்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவேன்.

மாநில வளர்ச்சிக்காகவும்...

புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்பது நமது உரிமை. அதை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாம் வலியுறுத்தி வருகிறோம். முதல்-அமைச்சர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைதான் இருக்கும். கடந்த ஆட்சியில் எந்த அளவுக்கு பிரச்சினையோடு இருந்திருப்பார்கள் என்பது தெரியும்.

கடந்த ஆட்சியாளர்கள், மத்தியில் அவர்களது ஆட்சி இருந்த போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வாங்கி இருக்கலாம். எனக்காக மட்டும் நான் மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்கவில்லை. மாநில வளர்ச்சிக்காகவும், விரைவாக மக்கள் பணியாற்றவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு அதிகாரம் வேண்டும் என்றும்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

நமக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் திட்டங்களை விரைவாக செயல்படுத்தலாம். தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் நமக்கு இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர் செல்வம்

இது குறித்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், 'புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று மத்திய அரசு கூறவில்லை. தற்போது உள்ள நிலை தொடரும் என்று தான் கூறியுள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார். மீண்டும் சட்டசபையில் மாநில அந்துந்து கோரி தீர்மானம் கொண்டு வரப்படும்'என்றார்.

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

புதுச்சேரி மாநில பத்திரப்பதிவுத்துறையில் போலி பத்திரம் தயாரித்து, அதிகாரிகள் உதவியுடன் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வீடியோ ஆதாரம் வெளியிட்டு பரபரப்பு குற்றஞ்சாட்டி இருந்தார்.

அது குறித்து இன்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் பத்திரப்பதிவு துறையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு என் கவனத்துக்கும் வந்தது. அதில் யார் ஊழல் செய்திருந்தாலும், இந்த அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். புதுச்சேரியை மத்திய நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்துவோம். மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதியும் கேட்டு பெற்றுள்ளோம். மாணவர்களுக்கு அறிவித்த மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. அவை ஒரு மாதத்தில் வழங்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொள்ள காலக்கெடுவை நீட்டித்து தருமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story