அரசு பள்ளிகளில் யோகாவை பாடமாக்க வேண்டும்


அரசு பள்ளிகளில் யோகாவை பாடமாக்க வேண்டும்
x

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோகாவை அரசு பள்ளிகளில் பாடமாக சொல்லித்தர வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

புதுச்சேரி

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் யோகாவை அரசு பள்ளிகளில் பாடமாக சொல்லித்தர வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

யோகா திருவிழா

புதுவை அரசின் சுற்றுலா, கல்வி, சுகாதாரம், மாசு கட்டுப்பாட்டு குழுமம் ஆகியவற்றின் சார்பில் 9-வது சர்வதேச யோகா தினவிழா உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. விழாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை செயலாளர் மணிகண்டன் வரவேற்றுப் பேசினார்.

யோகா பயிற்சியை தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுடன் இணைந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா செய்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

நமது உடல் சொல்வதை மனம் ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கு யோகா பயிற்சி முக்கியமானது. கோபம் என்பது கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. மனம் அமைதி பெறுவதற்கு யோகா உதவி செய்யும்.

கோபப்படும்போது உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்கிறது என்று மருத்துவ ரீதியாக சொல்கிறார்கள். கோபத்தை குறைக்கும்போது உடல் ஆரோக்கியமாக இருக்கும். ரத்தக்கொதிப்பு வராது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் யோகா மிக முக்கியமானது. வீட்டில் உள்ள பெண்கள், கர்ப்பிணிகள் யோகா செய்யவேண்டும். அவ்வாறு செய்தால் பிரசவம் எளிதாக இருக்கும். குழந்தையின் நலமும் பாதுகாக்கப்படும்.

அமைதி இல்லாத சூழல்

ஐ.நா.சபையே யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகள் கூட யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆரம்பத்தில் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானது என்ற கருத்து இருந்தது. ஆனால் இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஏற்றுக்கொண்டனர்.

இப்போது பலருக்கும் மன அழுத்தம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் தற்கொலைகளும் நடக்கின்றன. இளைஞர்களிடம் மனஅமைதி இல்லாத சூழல் உள்ளது. வாழ்க்கையை மேம்படுத்த யோகா உதவுகிறது. அரசுப் பள்ளிகளில் யோகாவை ஒரு பாடமாக சொல்லிக்கொடுக்க வேண்டும். அதேபோல் தற்காப்பு கலைகளும் தேவைப்படுகிறது. அதையும் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். வருங்காலத்தில் யோகா ஒரு திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ரங்கசாமி

விழாவில் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, 'யோகாவானது சர்வதேச அளவில் பரவி வருகிறது. அதற்கு காரணமாக இருப்பவர் நமது பிரதமர்தான். இந்த விழாவினை நடத்துவது நமக்கு பெருமைக்குரியது. யோகா பயிற்சி மனதை அமைதியாக வைத்திருப்பதுடன், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

யோகா செய்பவர்களை பார்க்கும்போது 70 வயது உடையவர்களும் 40, 50 வயது மதிக்கத்தக்கவர்களாக தெரிவார்கள். உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா தேவை' என்று குறிப்பிட்டார்.

விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கடற்கரை சாலை

சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலையில் யோகாசன செயல்விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மழை காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பான சரியான தகவல்கள் கிடைக்காததால் கடற்கரைக்கு வந்து மாணவ, மாணவிகள் ஏமாந்து போனார்கள்.

தலைமை நீதிபதி

புதுவை சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாக கருத்தரங்க அறையில் நடந்த யோகா தின விழாவை தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர், சக நீதிபதிகள், வக்கீல்களுடன் இணைந்து யோகாசனமும் செய்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் நீதிபதி அம்பிகா, வக்கீல் சங்க தலைவர் குமரன், பொதுச்செயலாளர் கதிர்வேல், இணை செயலாளர் திருமலைவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story