சேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு


சேலம் அருகே பட்டாசு குடோனில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Sep 2024 7:18 AM GMT (Updated: 4 Sep 2024 7:19 AM GMT)

மருந்து மூட்டை தவறி விழுந்து உரசியதில் தீ பற்றி வெடி விபத்து ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அடுத்த அரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கோமாளிவட்டம் பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. ஊருக்கு ஒதுக்கு புறமாக உள்ள தோட்டத்தில் பட்டாசு ஆலை அமைத்து பட்டாசு தயாரித்தல், தயாரித்து வைத்த பட்டாசுகளை சேமித்து வைக்க கிடங்குகளை அமைத்துள்ளார். இந்த கிடங்கில் வழக்கமாக 12-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பதற்காக சிவகாசியிலிருந்து மருந்து மூட்டைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மருந்து மூட்டைகளை இறக்கி வைக்கும் பணியில் சிவகாசியை சேர்ந்த ஜெயராமன் உள்ளிட்ட 4 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மருந்து மூட்டை தவறி விழுந்து உரசியதில் தீ பற்றி வெடி விபத்து ஏற்பட்டது.

ஒரு மூட்டை வெடித்ததும் அருகாமையில் இருந்த மற்ற மூட்டைகள், அங்கிருந்த கிடங்குகளுக்கு தீ பரவி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஜெயராமன், முத்துக்குமார், சுரேஷ், கார்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர்.

காயமடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜெயராமன் உயிரந்தார். மீதமுள்ள 3 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story