வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு அரசு எச்சரிக்கை


வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்களுக்கு அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 26 May 2024 7:16 PM IST (Updated: 26 May 2024 7:25 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது.

சென்னை,

அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து. மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களை கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது. அண்மை காலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும் டிஜிட்டல் சேவைகளை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும் நமது இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இம்மாதிரியாக இளைஞர்களை கவர்ந்து அழைத்து செல்லும் முகவர்கள் துபாய். தாய்லாந்து. சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர். இம்முகவர்கள் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்து தெரிவு செய்வதோடு அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர்.

தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள Golden Triangle என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர்.

தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா வேலைவாய்ப்பை அனுமதிக்காது. மேலும், அத்தகைய விசாவில் லாவோஸுக்கு வருபவர்களுக்கு லாவோஸ் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை வழங்குவதில்லை. சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதுபோன்ற மோசடி வலையில் நமது இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும் வேலைக்கான விசாவின் உண்மைதன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின். மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in. visa.phnompehh@mea.gov.in ஆகியவற்றின் மூலம் சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அ) 18003093793 (இந்தியாவிற்குள்)

ஆ) 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)

இ) 8069009900 (Missed Call No.)

மேலும் குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலர், சென்னை உதவி எண்- 90421 49222 அவர்களையும் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் / முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story