அண்ணாமலை முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளட்டும் - அ.தி.மு.க. பதிலடி


அண்ணாமலை முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளட்டும் - அ.தி.மு.க. பதிலடி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 6 Jun 2024 4:36 PM IST (Updated: 6 Jun 2024 5:05 PM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி குறித்தோ, எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்று அ.தி.மு.க. ஐ.டி. விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சென்னை,

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "2019-ல் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார்.

தனியாக இருந்தே அ.தி.மு.க. ஒரு சீட்டு கூட பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றாக இருந்திருந்தால் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எப்படி அவர் சொல்கிறார்? எஸ்.பி.வேலுமணி கூறியதை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அ.தி.மு.க. தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஐ.டி. விங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், "அ.தி.மு.க. குறித்தோ, கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்தோ, அண்ணன் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை.

தன் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அ.தி.மு.க. பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பாற்றிக் கொள்ளட்டும்! ஆடு, ஓநாய், நரி என எதுவந்தாலும், எப்படி கொக்கரித்தாலும் அ.தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story