டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது


டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு ஒப்பந்தம்: முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது
x
தினத்தந்தி 5 Sep 2024 5:09 AM GMT (Updated: 5 Sep 2024 5:12 AM GMT)

தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டின் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.

இதன்மூலம் மொத்தம் ரூ.1,300 கோடி முதலீட்டில் 4,600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரில் ஈட்டன் மற்றும் அஷ்யூரன்ட் நிறுவனங்களுடன் முதல்-அமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகியுள்ளது. இது குறித்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2,000 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. ரில்லியண்ட் நிறுவனம் உற்பத்தி அலகு, உலகளாவிய ஆதரவு மையத்தை தமிழகத்தில் நிறுவுகிறது. இந்த மதிப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி.

நைக் (Nike) நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவாக்கம் செய்வது, சென்னையில் ஒரு தயாரிப்பு மையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும்ஆப்டம் (Optum) நிறுவனம் தனது தொழிலை திருச்சி, மதுரையில் விரிவாக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.


Next Story