தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி


தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி
x
தினத்தந்தி 2 Oct 2024 1:32 PM GMT (Updated: 2 Oct 2024 3:19 PM GMT)

அரசியல்வாதி போல் கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான உறவை துண்டிக்கும் விதமாக கவர்னரின் செயல்பாடு உள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவி அரசியல்வாதி போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். ராஜ்பவனை அரசியல் பவனாக கவர்னர் ஆர்.என்.ரவி மாற்றியுள்ளார்.

கவர்னரின் கதாகாலட்சேபம் தமிழ்நாட்டில் எடுபடாது. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் கவர்னர் இருக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தூதுவர் போலவும், நீட் தேர்வுக்கு ஒரு பி.ஆர்.ஒ. போல கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார். காந்தி மண்டபத்தை சுத்தம் செய்த கவர்னருக்கும், கேமராமேன் கண்களுக்கும் மதுபாட்டில் தெரிந்திருக்கிறது.

அண்டை மாநிலங்களில் மதுவிற்பனை அமலில் இருக்கும்போது தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கைக் கொண்டு வருவது சாத்தியமில்லை. எல்லா மாநிலங்களும் சேர்ந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும்; தமிழக அரசால் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிது கூட கிடையாது. இந்தியா முழுவதும் மதுவிலக்கிற்கு சட்டத்தை கொண்டு வந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும். திமுக அரசு மது விலக்கிற்கு எப்போதும் ஆதரவான அரசு. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story