பேருந்துகள் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சிவகங்கை மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உடனடியாக மாவட்ட கலெக்டரையும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






