மதுரை தவெக மாநாட்டிற்கு சென்ற 18 வயது இளைஞர் பலி

இளைஞர் ரோஷன் கூட்ட நெரிசலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மதுரை,
தமிழக சட்டமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் (த.வெ.க.) சந்திக்கும் முதல் தேர்தல். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்தநிலையில் கட்சியின் 2-வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடந்தது.
மதுரையில் நடந்த மாநாட்டில் பேசிய விஜய், “வரும் 2026-ம் ஆண்டில் தி.மு.க.- த.வெ.க. இடையேதான் நேரடி மோதல். அ.தி.மு.க., பா.ஜனதா பொருந்தாத கூட்டணி. 234 தொகுதிகளிலும் த.வெ.க. தனித்து போட்டியிடும்” என பேசினார்.
இந்தநிலையில், மதுரை த.வெ.க மாநாட்டில் பங்கேற்ற நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் உயிரிழந்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாநாட்டு சென்றவர் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த குடும்பத்தினருக்கு இளைஞரின் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தவெக மாநாட்டுக்கு சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (33 வயது) என்பவர் நண்பர்களுடன் வேனில் புறப்பட்டு வந்துள்ளார். மதுரை சக்கிமங்கலம் அருகே வந்தபோது பிரபாகரன் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் பிரபாகரன் மீண்டும் திரும்பி வரவில்லை.
இதையடுத்து நண்பர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்பொழுது பிரபாகரன் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.






