தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 19 ஆயிரம் தீ விபத்துகள் பதிவு; அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் தீ விபத்தில் இருந்து ரூ.610 கோடியே 12 லட்சத்து 14 ஆயிரத்து 496 மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
சென்னை,
தமிழகத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 19 ஆயிரத்து 87 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன. தீ விபத்தில் சிக்கிய 101 பொதுமக்கள் மற்றும் 80 விலங்குகள் காப்பாற்றப்பட்டுள்ளன. மேலும், தீ விபத்தில் இருந்து ரூ.610 கோடியே 12 லட்சத்து 14 ஆயிரத்து 496 மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இதேபோல, அவசர காலங்களில் ஆபத்தான இடங்கள், விபத்துகள், இடிபாடுகளில் சிக்கிய மக்கள், செல்லப்பிராணிகள், கால்நடைகளை காப்பற்றுவதற்காக 1 லட்சத்து 795 அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வந்துள்ளன. இதில் 2 ஆயிரத்து 250 பொதுமக்கள் மற்றும் 61 ஆயிரத்து 174 விலங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக 2 ஆயிரத்து 623 அழைப்புகள் தீயணைப்பு துறையினருக்கு வந்துள்ளது. இதில் சிக்கிய 25 பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ரூ.48 கோடியே 66 லட்சத்து 43 ஆயிரத்து 204 மதிப்பிலான சொத்துகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இதேபோல, அவசர காலங்களில் ஆபத்தான இடங்களில் சிக்கிய மக்கள், விலங்குகளை மீட்க 13 ஆயிரத்து 936 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 525 பொதுமக்கள் மற்றும் 8 ஆயிரத்து 176 விலங்குகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளன.






