ஒரே தண்டவாளத்தில் நின்ற 2 மின்சார ரெயில்கள்.. சென்னையில் பரபரப்பு


ஒரே தண்டவாளத்தில் நின்ற 2 மின்சார ரெயில்கள்.. சென்னையில் பரபரப்பு
x

கடந்த சில மாதங்களாக காலை நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முறையாக இயக்கப்படுவதில்லை.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக மின்சார ரெயில்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் இந்த நேரத்தில் பயணிப்பதால், எப்போதும் இந்த நேரங்களில் ரெயில்களில் கூட்டம் இருக்கும்.

ஒரே தண்டவாளத்தில் நிறுத்தம்

இந்த நிலையில், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் வழக்கம்போல இன்று மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. அப்போது, காலை 9 மணிக்கு மேல் தாம்பரத்தில் இருந்து கடற்கரை வரும் வழியில் மின்சார ரெயில் சேவை 30 நிமிடங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டது. அதாவது, கடற்கரை நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரெயில் ஒன்று காலை 9.30 மணியளவில் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, பின்னால் வந்த மற்றொரு ரெயில் சிறிது இடைவெளியில் அதன் அருகே நிறுத்தப்பட்டது.

சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் சிறிது இடைவெளியில் 2 ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, ஆபத்தை உணராமல் பயணிகள் பலர் பின்னால் நின்ற ரெயிலில் இருந்து இறங்கி, முன்னால் நின்ற ரெயிலில் இடம்பிடிக்க ஓடி சென்றதை பார்க்க முடிந்தது. இந்த ரெயில்களில் பயணித்த பயணிகள் பலரும் எழும்பூர், பூங்கா, கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பணிக்கு செல்கின்றவர்கள். இவர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் செல்ல வேண்டும். ஆனால், இந்த வழித்தடத்தில் நாள்தோறும் மின்சார ரெயில்கள் டவுன் பஸ்போல ஆங்காங்கே நிறுத்தப்படுவதால், சில மாதங்களாகவே சரியான நேரத்தில் பணிக்கு செல்ல முடியாமல் பரிதவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாமதமாக வரும் ரெயில்கள்

கடந்த சில மாதங்களாக காலை நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைவதற்கு 30 நிமிடங்கள் ஆகிறது. இதனால் நாள்தோறும் ரெயில் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

காரணம் என்ன?

செங்கல்பட்டு-கடற்கரை வழித்தடத்தில் காலை நேரத்தில் இயக்கப்படும் விரைவு மின்சார ரெயில்கள் சேத்துப்பட்டை கடந்து எழும்பூர் செல்வதற்கு மின்சார ரெயில்கள் செல்லும் தண்டவாளம் வழியாக திருப்பிவிடப்படுகிறது. இதனால், அந்த வழித்தடத்தில் வரும் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்படுகிறது. விரைவு மின்சார ரெயில் எழும்பூரில் இருந்து கடந்து சென்றதும், நிறுத்தப்பட்ட ரெயில்கள் ஒன்றபின் ஒன்றாக எழும்பூர் வந்தடைகிறது. இதனால் பயணிகள் நாள்தோறும் தாமதமாக பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அரங்கேறும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் தொடர்ச்சியாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

1 More update

Next Story