விவசாய மின் இணைப்பிற்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் உட்பட 2 பேர் கைது

தென்காசியில் வாலிபர் ஒருவர், தனது அப்பாவின் பெயரில் உள்ள நிலத்திற்கு, விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளரை சந்தித்து கேட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர், காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 30). இவர் தனது அப்பாவின் பெயரில் வீ.கே.புதூரில் உள்ள நிலத்திற்கு விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த மின்வாரிய இளநிலை பொறியாளர் பிரேம்ஆனந்தை சந்தித்து கேட்டுள்ளார். அப்போது ரூ.7 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் மீட்டர் பொருத்துவேன் என்று கறாராக பிரேம்ஆனந்த் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வகணேஷ் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூ.7 ஆயிரம் பணத்தை வழங்க அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து பிரேம்ஆனந்தை சந்தித்து ரூ.7 ஆயிரம் பணத்தை செல்வகணேஷ் கொடுத்துள்ளார்.
அதற்கு வீ.கே.புரத்தை சேர்ந்த தனது நண்பர் துரையிடம் கொடுக்குமாறு பிரேம்ஆனந்த் கூறியுள்ளார். அந்த லஞ்சப்பணத்தை துரை பெற்றுக்கொண்டபோது அங்கு மறைந்திருந்த தென்காசி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளால் பிரேம்ஆனந்த் மற்றும் துரை ஆகிய 2 பேரை கைது செய்தனர்.






