திருநெல்வேலியில் 2 யூனிட் எம்.சாண்ட் மணல், மினி லாரி பறிமுதல்- 2 பேர் கைது

முக்கூடல் பகுதியில் சேரன்மாதேவி மண்டல துணை தாசில்தார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியில் சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆர்ச் அருகே சேரன்மாதேவி மண்டல துணை தாசில்தார் பிரேமா வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது முக்கூடல் இந்திரா காலனியை சேர்ந்த பேச்சிமுத்து (வயது 42) மற்றும் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பரமசிவன்(38) ஆகிய 2 பேரும் வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர்கள் உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து சேரன்மகாதேவி மண்டல துணை தாசில்தார் முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் முக்கூடல் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பேச்சிமுத்து, பரமசிவன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து 2 யூனிட் எம்.சாண்ட் மணல் மற்றும் மினி லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.






