2026 சட்டசபை தேர்தல்; நிர்வாகிகளுக்கு விரிவாக ஆலோசனை வழங்கிய எடப்பாடி பழனிசாமி


2026 சட்டசபை தேர்தல்; நிர்வாகிகளுக்கு விரிவாக ஆலோசனை வழங்கிய எடப்பாடி பழனிசாமி
x

தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சென்னை,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், பூத் (பாகம்) கிளை கழகங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவது குறித்த விபரங்களை மாவட்ட கழக செயலாளர்களிடம் முழுமையாக கேட்டறிந்து, இப்பணியினை விரைந்து முடிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர், 1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது மிகவும் முக்கியமான பணி என்பதாலும், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்கு இது சரியான தருணம் என்பதாலும் இதில் தனி கவனம் செலுத்தி, சரியான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன் விபரங்களை தலைமை கழகத்திற்கு தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து, 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலையொட்டிய பணிகளை விரைந்து ஆற்றுவது குறித்தும் விரிவாக ஆலோசனை வழங்கினார்.

1 More update

Next Story