அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது

அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பின்பற்றுவது போன்று பேருந்துகளில் மாநிலத்தில் பெயர் இடம்பெறும் விதமாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என பெயர் எழுதி இயக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திருத்தணி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திற்கு , நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாமு, மண்டல பொறுப்பாளர் சத்யா, திருத்தணி தொகுதி வேட்பாளர் சந்திரன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்தனர்.
பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த, 10-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளில், அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டிருந்த இடத்தில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஓட்டி திமுக, அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் பஸ் நிலையத்தில் பஸ்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையறிந்த திருத்தணி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர்.






