4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தானேஷ் என்கிற யுவராஜ் (29 வயது). இவர் கடந்த 2018-ம் ஆண்டு சாலையில் விளையாடிக்கொண்டு இருந்த 4 வயது சிறுமியை உறவினர் வீட்டு மாடிக்கு தூக்கி சென்று மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து, சிறுமியின் தாயார் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராஜை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் விஜயலட்சுமி வாதாடினார். இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் நீதிபதி உமாமகேஸ்வரி சாட்சியங்களுடன் குற்றம் நிரூபணமானதாக கூறி குற்றவாளி யுவராஜிக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறினார்.
ஜாமீனில் வெளியே வந்த யுவராஜ் ஸ்ரீபெரும்புதூரில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளார். அந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் திருவள்ளூர் போலீசார் நீதிமன்ற உத்தரவை காஞ்சிபுரம் கிளை சிறை அதிகாரிகளிடம் வழங்க உள்ளனர்.






