27-ந்தேதி சூரசம்ஹார விழா - திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணி தீவிரம்


27-ந்தேதி சூரசம்ஹார விழா - திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 10 Oct 2025 8:59 PM IST (Updated: 10 Oct 2025 9:04 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹார விழா நடைபெறுவதையொட்டி கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

தூத்துக்குடி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கடற்கரையில் புனித நீராடி சாமி தரிசனம் செய்கின்றனர். திருச்செந்தூர் சென்று மும்மூர்த்திகளின் வடிவமாக காட்சி தரும் முருகப்பெருமானை வழிபட்டால், முருகனின் அறுபடை வீடுகளையும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு நடக்கும் கந்தசஷ்டி விழாவையும், சூரசம்ஹாரத்தையும் காண பக்தர்கள் திரண்டு வருவர். இந்த தலத்தில் சண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமாள் என 4 உற்சவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என அழைக்கின்றனர். இவரே திருக்கல்யாணத்தின் போது உற்சவ மூர்த்தியாக எழுந்தருள்வார். அதேபோல் சூரசம்ஹாரத்தின் போது ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சக்தி வேல் தாங்கி, சூரனை சம்ஹாரம் செய்வார். இந்த 4 உற்சவர்களையும் தரிசித்து, வழிபட்டால் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் இந்த ஆண்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முதல் 6 நாட்கள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரமும் நடைபெற இருக்கிறது. இதையடுத்து ஏழாம் நாளான 28-ந்தேதி முருகப்பெருமான்- தெய்வானை திருக்கல்யாணமும், அதனை அடுத்து 5 நாட்களுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற உள்ளது.

வரும் 27-ந்தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கோவில் வளாகத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணியும், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை சமன்படுத்தும் பணியும் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. கடற்கரையில் அய்யா கோவில் அருகில் இருந்து மண் அள்ளும் எந்திரம் மூலம் மணல் மேடுகள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடற்கரையில் கம்புகளால் சாரங்கள் கட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story