மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆந்திர பக்தர்களிடம் பணம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அவர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் ஆலய வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்த வந்த 39 அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு வந்துள்ளனர். அவர்களிடம் 3 பேர் கோவில் மூலம் நியமிக்கப்பட்ட ஆலய வழிகாட்டி என்று அறிமுகமானார்கள். மேலும் அவர்கள் ஒருவருக்கு ரூ.250 கொடுத்தால் சாமியை விரைவாக தரிசனம் செய்து வைக்கிறோம் என்று கூறியுள்ளனர். பின்னர் அவர்களிடம் மொத்தமாக 9,750 ரூபாய் பெற்று கொண்டு 50 ரூபாய் டிக்கெட் எடுத்து அந்த வழியில் தரிசனம் செய்யுமாறு அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக ஆந்திர பக்தர்களும், அவர்கள் 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதை கண்ட கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், அவர்கள் 3 பேரிடம் விசாரித்தார். ஆனால் அவர்கள் கண்காணிப்பாளரை தகாத வார்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்தனர். உடனே அவர் இது குறித்து மீனாட்சி கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிம்மக்கல் கிருஷ்ணஅய்யங்கார் தோப்பை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 46), வில்லாபுரம் சுண்ணாம்பு காளவாசல் பகுதியை சேர்ந்த அம்மையப்பன் (42), வில்லாபுரம் தென்றல்நகரை சேர்ந்த கணேசன் (47) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






