நகைக்காக தாயையும், மகளையும் கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள்தண்டனை - கோர்ட்டு அதிரடி

கொலை செய்த 3 பேருக்கு தலா 6 ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேசில் கார்டன் பகுதி 2 ஆம் கட்டளையில் வசித்து வருபவர் ராமசாமி (34) இவர் ஓமன் நாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (30)ஆசிரியையாக பணி செய்து வந்தார். இவர்களுக்கு சுரவிஸ்ரீ (6) மற்றும் 6 மாத கைக்குழந்தை குணஸ்ரீ என இரு பெண் குழந்தைகள் இருந்தனர்.
கணவர் வெளிநாட்டில் வசிப்பதாலும், தேன்மொழி ஆசிரியையாக இருப்பதாலும் இவர்களது வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண் சத்யா (28) இவர்களோடு தேன்மொழியின் தாயார் வசந்தா(60) என்பவரும் வசித்து வந்துள்ளனர்.
வசந்தாவும், அவரது பேத்திகள் இருவரும் வீட்டில் இருந்த போது வேலைக்காரப் பெண் சத்யா, ஜெயக்குமார் மற்றும் தவுலத் பேகம் ஆகிய இருவருடனும் சேர்ந்து கூட்டு சதி செய்யும் நோக்கில் மூவரும் வசந்தாவையும், அதன் பின்னர் வீட்டுக்கு வந்த தேன்மொழியையும் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.
இச்சம்பவத்தை 6 வயது பெண் குழந்தை சுரவிஸ்ரீ பார்த்ததால் அச்சிறுமியையும் கொலை செய்யத்திட்டமிட்டு தாக்கிவிட்டு, வீட்டிலிருந்த 16 பவுன் தங்க நகைகள், வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்களையும் எடுத்துக்கொண்டு 3 பேரும் தலைமறைவாகினர்.
மறுநாள் மயக்கம் தெளிந்த குழந்தை சுரவிஸ்ரீ எதிர்வீட்டுக்கு சென்று அந்த வீட்டிலிருந்த கன்னியப்பன் என்பவரிடம் கொலைச்சம்பவத்தை விவரித்திருக்கிறார்.கன்னியப்பன் கொடுத்த புகாரின் பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயக்குமார் (55) வேலைக்காரப்பெண் சத்யா(28) தவுலத்பேகம்(50) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் கடந்த 19.4.2016 ஆம் தேதி நடந்தது. இக்கொடூர கொலைச் சம்பவ வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் சசிரேகா 39 சாட்சிகளிடன் ஆஜரானார். குற்றத்தை மறைத்தல், கொடூரமாக கொலை செய்தல், திருடிய பொருளை மறைத்தது, கொலை முயற்சி உட்பட 6 விதமான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு விசாரணை நடைபெற்றது.
வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுநிதி, 3 பேருக்கும் தலா 6 ஆண்டுகள் ஆயுள் தண்டனையும், 3 பேருக்கும் தலா ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அபராதத் தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அரசு பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.






