தேனி: முல்லைப்பெரியாற்றின் கரையோரம் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது


தேனி: முல்லைப்பெரியாற்றின் கரையோரம் 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
x

வீடுகளில் சிக்கித் தவித்த மக்களை டிராக்டர்கள், பொக்லைன் வாகனங்கள் மூலம் மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் முல்லைப்பெரியாற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காலையில் இருந்தே ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகர் முல்லைப்பெரியாற்றின் கரையோரம் அமைந்துள்ளது.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஆற்றின் கரைமேவி இந்த குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. நேரம் செல்லச் செல்ல குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது.

இந்த பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தெருக்களில் வெள்ளம் சீறிப் பாய்ந்து ஓடியது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் சிக்கித் தவித்தனர். பலரும் வீட்டின் மாடிப் பகுதிக்கு சென்றனர்.தகவல் அறிந்தவுடன் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன் சக்கரவர்த்தி, துணைத்தலைவர் மணிமாறன் ஆகியோர் அங்கு வந்தனர். பின்னர் பேரூராட்சி அதிகாரிகள், போலீசார், தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர்.

வீடுகளில் சிக்கித் தவித்த மக்களை டிராக்டர்கள், பொக்லைன் வாகனங்கள் மூலம் மீட்டு மேடான பகுதிக்கு கொண்டு வந்தனர். 200-க் கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் தேனியில் ஒரு திருமண மண்டபத்தில் அமைக்கப்பட்ட முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் பலர் வீடுகளில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து தங்களின் வீடுகளின் மேல் மாடி பகுதியில் தங்கினர்.

இந்த வெள்ளத்தை வேடிக்கை பார்க்கவும் மக்கள் பலர் அங்கு வந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். இரவு வரை தெருக்களில் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.வெள்ள பாதிப்பு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது.

1 More update

Next Story