தஞ்சையில் தினசரி 4 ஆயிரம் டன் நெல் கொள்முதல்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி


தஞ்சையில் தினசரி 4 ஆயிரம் டன் நெல் கொள்முதல்:  உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x

டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடம் உள்ளது என துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தஞ்சை,

தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு துணை முதல்-மந்திரி உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பும் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது அவருடன் துறை சார்ந்த அதிகாரிகளும் சென்றனர். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், 50 நாட்களில் 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் நெல் மூட்டைகள் வைக்க இடம் உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டு உள்ளன. ரெயில் மூலம் வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

நெல் கொள்முதல் குறித்த புகார்கள் பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டேன். ஒரு மாதத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விட்டன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நெல் கொள்முதல் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். அவர் கூறியபடி நெல் மூட்டைகள் நனையவும் இல்லை, முளைக்கவும் இல்லை. விவசாயிகள் யாரும் புகார் எதுவும் அளிக்கவில்லை. அவர் கூறியது போன்று செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

நெல் கொள்முதல் விவகாரத்தில் அவர் தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஒரு வாரத்திற்கு முன்பே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்து விட்டார். அதனால், விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யும் அவருடைய எண்ணம் ஈடேறாது. 10 நாட்களில் நெல் கொள்முதல் பணிகள் அனைத்தும் நிறைவடையும் என்றார்.

1 More update

Next Story