சென்னையில் 131 இடங்களிலிருந்து 45.98 டன் பழைய பொருட்கள் சேகரித்து அகற்றம்


சென்னையில் 131 இடங்களிலிருந்து 45.98 டன் பழைய பொருட்கள் சேகரித்து அகற்றம்
x

நான்கு சனிக்கிழமை நாட்களில் 584 நபர்களிடமிருந்து 225.76 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டது.

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 6,500 டன் திடக்கழிவுகளும், 1,000 டன் கட்டடம் மற்றும் கட்டுமான இடுபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் குப்பைகள் மட்டுமல்லாது, தங்களது வீட்டில் உள்ள பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகளை பொது இடங்களில் கொட்டுவதைத் தவிர்த்திடும் விதமாகவும், மக்களுக்கு இதன் காரணமாக ஏற்படும் இடையூறு மற்றும் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதைத் தவிர்த்திடும் விதமாகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள்,மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை 11.10.2025 அன்று தொடங்கப்பட்டது.

அதன்படி, 11.10.2025, 18.10.2025, 25.10.2025 மற்றும் 01.11.2025 ஆகிய நான்கு சனிக்கிழமை நாட்களில் 584 நபர்களிடமிருந்து 225.76 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இன்று (08.11.2025) 131 நபர்களிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 45.98 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு, கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச் சென்று விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று நடைபெறும் இச்சேவையை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்கூட்டியே பெருநகர சென்னை மாநகராட்சியின் “நம்ம சென்னை” செயலியில் (App) பதிவு செய்ய வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் அளிக்கப்பட வேண்டும் (அல்லது) பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 94450 61913 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவலை அனுப்ப வேண்டும்.

இதன் அடிப்படையில் மாநகராட்சிப் பணியாளர்கள் பதிவு செய்த நபர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் நேரடியாகச் சென்று, பழைய சோஃபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து பாதுகாப்பாகவும், அறிவியல் முறையிலும் அகற்றும் பணிகளை மேற்கொள்வார்கள்.

இச்சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story