திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - மு.க.ஸ்டாலின் இரங்கல்


திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி -   மு.க.ஸ்டாலின் இரங்கல்
x

திருப்பதியில் எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசிக்க, வைகுண்ட வாயில் வழியாகச் செல்ல நேற்று இரவு 9 மணி அளவில் பக்தர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்ல முயன்றனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூச்சுத் திணறலால் பலர் மயக்கமடைந்தனர். சுமார் 35-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ருயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 5 பெண்கள் அடங்குவர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் கூறினார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இன்று அவர் திருப்பதி திருமலை தேவஸ்தானுக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்த உள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்திக்க உள்ளார். கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, தேவஸ்தான நிர்வாகம் மீது ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சொர்க்கவாசல் இலவச டோக்கன் பெற ஒரே நேரத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story