தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதுமான முழு பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து பேசியதாவது;
”எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு முன்பு தமிழகத்தில் 6,14,41,587 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு பின்பு தற்போது 5,43,76,755 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் 2,77,60,332 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 7,191 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 97,32,832 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். மூலம் பட்டியலில் இருந்த 26,94,672 இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வரைவு வாக்காளர் பட்டியலில் இல்லாதவர்கள் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், இ.ஆர்.ஓ, சாவடி முகவர்கள் அல்லது ஆன்லைன் மூலம் ஜனவரி18-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதலாக, அனைத்து பூத்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம், அந்த முகாம்களில் அவர்கள் விண்ணப்பிக்கலாம்.”
இவ்வாறு அவர் கூறினார்.






