சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம்

பாமக பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
சேலம்,
சேலத்தில் இன்று (திங்கட்கிழமை) டாக்டர் ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. காலை 10 மணி முதல் 11.30 மணி வரை செயற்குழு கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு பொதுக்குழு கூட்டம் நடக்கிறது.
செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4 ஆயிரத்து 300 பேர் ஆகியோருடன் கலந்துரையாடல் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் சம்பந்தமான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டசபை தேர்தலில் கூட்டணியில் சேரும்படி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய்யின் த.வெ.க. ஆகிய 3 கட்சிகளிடம் இருந்து அழைப்பு வந்து உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை டாக்டர் ராமதாஸ் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் சேலத்தில் முகாமிட்டு உள்ளனர்.






