சென்னையில் தொழிலதிபரை ஏமாற்றி நூதன பண மோசடி: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் கைது

ரூ.40 லட்சம் கொடுத்தால் 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சமாக திருப்பி தரப்படும் என்று கூறி சென்னையில் தொழிலதிபரிடம் நூதன மோசடி நடந்துள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ், தொழிலதிபர். இவர் தியாகராயநகர் ராஜா பாதர் தெருவில் உள்ள ஒரு டீக்கடையில் கடந்த 9-ந் தேதியன்று நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், தாங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது தொழிலில் ரூ.40 லட்சம் முதலீடு செய்தால் அடுத்த 5 மணி நேரத்தில் ரூ.50 லட்சமாக திருப்பி தருவோம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் அங்கு தாங்கள் தங்கியுள்ள ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று ரூ.50 லட்சத்தை ஆனந்தராஜிடம் காட்டியுள்ளனர். அதைப் பார்த்து நம்பிய ஆனந்தராஜ், கடந்த 10-ந் தேதி, ரூ.40 லட்சத்தை குறிப்பிட்ட 3 பேரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியபடி ரூ.50 லட்சத்தை கொடுக்கவில்லை. அதோடு ஆனந்தராஜ் முதலீடு செய்த ரூ.40 லட்சத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதுபற்றி கேட்டபோது, ஆனந்தராஜை மேற்கண்ட 3 பேரும் சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்து, அதே ஓட்டலில் 3 நாள்கள் தங்க வைத்து பணம் ஏதும் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆனந்தராஜ், இந்த மோசடி குறித்து பாண்டி பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
ஆனந்தராஜியிடம் ரூ.40 லட்சத்தை சுருட்டிய 3 பேரையும் நேற்று கைது செய்து, போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தஞ்சாவூர், கிழக்கு காவேரி நகரைச் சேர்ந்த லூர்து என்சன்ராஜ் (வயது 48), அவரது சகோதரியின் மகன்களான மரிய செர்வின் ஜெப்ரி(28), ஷெல்டன் பெர்மினிஸ் (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கட்டு, கட்டாக போலி ரூபாய் நோட்டுகளும், 5 செல்போன்களும் மற்றும் வங்கி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. கைப்பற்றப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள், ஓட்டல் அறையில் காட்டிய ரூ.50 லட்சமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.






