இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாதவகண்ணன் (வயது 27) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினர்போல் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் இன்ஸ்பெக்டர் தனது மகள்களை பார்த்துக்கொள்வதற்காக உறவினரான இளம்பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்திருந்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களாக வேலையின் காரணமாக இன்ஸ்பெக்டர் மதுக்கரையில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல முடியவில்லை. இதனால் தனது டிரைவரான மாதவகண்ணனை பாதுகாப்புக்காக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த இளம்பெண் குளித்தபோது, அதனை மறைந்திருந்து மாதவகண்ணன் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உடனடியாக செல்போன் மூலம் நடந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டரிடம் கூறி அழுதுள்ளார்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, இளம்பெண் குளிக்கும்போது வீடியோ எடுத்த மாதவ கண்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






