வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு... பழகுவதை தவிர்த்ததால் வாலிபர் வெறிச்செயல்


வீடு புகுந்து காதலிக்கு அரிவாள் வெட்டு... பழகுவதை தவிர்த்ததால் வாலிபர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 April 2025 8:51 AM IST (Updated: 16 April 2025 9:01 AM IST)
t-max-icont-min-icon

அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த காதலிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கற்குடி கிராமத்தை சேர்ந்த இசக்கிதுரை மகன் திருமலைக்குமார் (வயது 22). இவருக்கும் ஒரு இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் பல்வேறு இடங்களில் சுற்றிவந்தனர்.

கடந்த சில நாட்களாக திருமலைக்குமாருடன் பழகுவதை அவரது காதலி தவிர்த்து வந்தார். இதனால் அவர் மனவேதனையில் இருந்தார். இந்த நிலையில் விரக்தியில் இருந்த திருமலைக்குமார் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு, காதலி வீட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த அவருடன் தகராறில் ஈடுபட்டு, தான் வைத்திருந்த அரிவாளால் காதலி தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் பலத்த காயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய திருமலைக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story