நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

வடக்கன்குளம் அருகே நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே பழவூரை அடுத்த யாக்கோபுரம் சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் கூலி வேலைக்கு சென்றார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த வெறிநாய் திடீரென்று அவரை கடித்தது. எனினும் அவர் அதனை பொருட்படுத்தாமலும், உரிய சிகிச்சை பெறாமலும் வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அய்யப்பனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ரேபிஸ் தாக்கி வாலிபர் உயிரிழந்தது தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, சென்னை தலைமையகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த அய்யப்பன், நாய் கடித்த பிறகு தடுப்பூசி செலுத்தாமல் இருந்ததற்கான காரணம்? வேறு ஏதும் பிரச்னையா? உள்ளிட்டவை குறித்து விசாரிப்பதற்காக அவரின் வீட்டாரிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்த உள்ளனர்.






