தொழில் அதிபர் போல நடித்து 12 பெண்களிடம் மோசடி செய்த வாலிபர்


தொழில் அதிபர் போல நடித்து 12 பெண்களிடம் மோசடி செய்த வாலிபர்
x

திருமண வரன் தேடும் செயலிகளில் தன்னை பெரிய தொழில் அதிபர் போல காட்டி கொண்டு வாலிபர் பதிவு செய்து வைத்துள்ளார்.

சென்னை,

சென்னை அடுத்த தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் கல்யாணசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 24). இவர் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயங்கி வரும் திருமண வரன் தேடும் செயலிகளில் விலை உயர்ந்த கார்கள், ஆடம்பர பங்களா, மிகப்பெரிய தொழிற்சாலை உள்ளிட்டவைகளுடன் படம் எடுத்து வைத்து கொண்டு தன்னை பெரிய தொழில் அதிபர் போல காட்டி கொண்டு பதிவு செய்து வைத்துள்ளார்.

இவரது ஆடம்பரத்தை பார்த்து திருமணம் செய்ய விருப்பம் இருப்பதாக தெரிவிக்கும் பெண்களிடம் பல கோடிகளுக்கு அதிபர் போல பேசி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களிடம் பல்வேறு வகைகளில் ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்து சுற்றுலா தலங்களுக்கு சென்று பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

அந்த வகையில திருமண வரன் தேடும் செயலியில் கோபிநாத் விளம்பரத்தை பார்த்து ஐ.டி. துறையில் பணிபுரியும் பெண்ணின் குடும்பத்தினர் இவரிடம் திருமணத்திற்காக பேசியுள்ளனர். கோபிநாத் விரும்பம் தெரிவித்ததையடுத்து அந்த பெண் இவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். பல நாடுகளில் தொழில் நடத்தி வருவது போல கோபிநாத் அந்த பெண்ணிடம் 2 மாதமாக பேசி வந்த நிலையில் தன்னுடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி நைசாக தனது மோசடி வலையை விரித்தார்.

வீட்டு வேலைக்காரருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் என ரூ.20 ஆயிரத்தை ஜிபே மூலம் பெற்றுள்ளார். அடுத்த சில நாட்களில் தன்னிடம் வேலை செய்யும் பெண்ணிற்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் ரூ.3 லட்சம் அவசரமாக தேவைப்படுகிறது. வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறி நடித்தார் கோபிநாத். பரிதாபப்பட்டு கடன் வாங்கி அந்த பெண் பணத்தை அனுப்பினார்.

அதன் பின் வங்கியில் கோடி கணக்கான பணத்தை முடக்கி விட்டார்கள். ரூ.65 லட்சத்தை வங்கிக்கு அபராதமாக கட்ட வேண்டும் எனக் கூறி கோபிநாத் பணம் கேட்டுள்ளார். அடுக்கடுக்கான பொய்களை மெய் என நம்பி அந்த பெண் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று ரூ.3 லட்சத்தை கோபிநாத்துக்கு அனுப்பி விட்டு ரூ.3 லட்சத்தில் பழைய கடன்களுக்கு தவணை கட்டி வந்துள்ளார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ரூ.9 லட்சத்து 80 ஆயிரத்தை கோபிநாத் வாங்கி இருக்கிறார்.

இவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பெண் ஐ.டி. ஊழியர் இவரை தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்காணிக்க தொடங்கியுள்ளார். அப்போது தொழில் அதிபர் போல பந்தா காட்டி பலரை ஏமாற்றியது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன் தலைமையில் தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் கோபிநாத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள், செல்போன்களை ஆய்வு செய்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது

கடந்த 3 மாதங்களில் மட்டும் பெண் டாக்டர் உள்பட 12-க்கும் மேற்பட்ட பெண்களிடம் கோபிநாத் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் போலி தொழிலதிபர் என தற்போது தெரியவந்துள்ளதால் மேலும் ஏராளமானவர்கள் புகார் அளிக்க முன்வருவார்கள் என தெரிகிறது.

போலீசார் அவருடைய லேப்டாப்புகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் இந்தியா முழுவதும் இவர் எத்தனை பெண்களை ஏமாற்றி இருக்கிறார் என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

1 More update

Next Story