திருமணம் நிச்சயமான வாலிபர் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சோகம்

திருப்பூரில் எண்ணெய் தொட்டிக்குள் தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கே.பி.சி. நகரை சேர்ந்தவர் நாகமலை. அவருடைய மனைவி லதா. இந்த தம்பதியின் மகன் திருமூர்த்தி (30 வயது). இவர், வெள்ளகோவில்-தாராபுரம் சாலையில் சேரன் நகரில் தனியாருக்கு சொந்தமான நல்லெண்ணெய் ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம், வருகிற டிசம்பர் மாத்தில் நடைபெற இருந்தது. திருமூர்த்திக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எண்ணெய் ஆலையில் தொழிலாளர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டனர். அதன்படி திருமூர்த்தியும் வேலை செய்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை 3 மணி அளவில், மில்லில் உள்ள 3 அடி ஆழம் உள்ள தரைமட்ட எண்ணெய் தொட்டியில் திருமூர்த்தி தவறி விழுந்தார். அதில் பாதி அளவு எண்ணெய்யில் அவர் மூழ்கியபடி கிடந்தார். இதனைக்கண்ட சக தொழிலாளிகள் அவரை மீட்டனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே திருமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பணியின் போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு திருமூர்த்தி எண்ணெய் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






