கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களுக்கு கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பேருந்து நிலையங்களுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து பயணிகள் செல்வதற்கு ஏற்ற வகையில் கூடுதலாக சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் 19-ந்தேதி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட மூன்று பேருந்து நிலையங்களுக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள மூன்று பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதலாக 275 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இன்று முதல் 19-ந்தேதி வரை 4 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com