கோவையில் வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி; பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோவையில் வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதி; பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
Published on

கோவை

கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறவுள்ள தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை அவர் தொடங்கி வைக்கிறார். இதற்காக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் இன்று கோவை விமான நிலையத்திற்கு மோடி வருகிறார். அங்கு அவருக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர்.

பின்னர் அவர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகத்துக்கு மதியம் 1.30 மணிக்கு செல்கிறார். அங்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதையடுத்து பிரதமர் மோடி, இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் பி.எம். கிசான் திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை வழங்கி பேசுகிறார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுவார்கள்.

மேலும் அவர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதன்பிறகு இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.அதைத்தொடர்ந்து அவர், இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 3.30 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநாடு நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர மாநாடு நடைபெறும் பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை-அவினாசி ரோட்டில் இருந்து கொடிசியா வளாகம் வரை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com