கழிவறையை பயன்படுத்த அனுமதி மறுத்த ஆம்னி பஸ்; நிறுவனத்திற்கு அபராதம் விதித்த கோர்ட்டு

ஆம்னி பஸ்சில் கழிப்பறையை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிர்வாகம் கூறியதாக பயணி கூறியுள்ளார்,
சென்னை,
சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் மனுவில், 'சென்னையில் இருந்து கோவைக்கு பிரபல தனியார் பஸ் டிராவல்ஸ் மூலம் பயணம் செய்வதற்காக கடந்த மே மாதம் டிக்கெட் முன்பதிவு செய்தேன். இந்த பஸ்சில் கழிப்பறை வசதி இருப்பதாக டிராவல்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது.
ஆனால், பயணத்தின் போது கழிப்பறையை சிறுநீர் கழிக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மலம் கழிக்க பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர். கழிப்பறை வசதி இருப்பதாக கூறி விட்டு கழிப்பறையை மலம் கழிக்க பயன்படுத்த அனுமதிக்க மறுப்பது நியாயமற்ற வர்த்தகம் ஆகும். எனவே, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இந்த மனுவை ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.
டிராவல்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜராகி பதில் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து ஆணையம் பிறப்பித்த உத்தரவில், 'தவறான அறிவிப்பை வெளியிட்டு, நியாயமற்ற வர்த்தகம் மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. டிராவல்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின் படி, எந்தவொரு நிபந்தனையும் இன்றி கழிப்பறை வசதியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அந்த அறிவிப்பை இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும். மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு டிராவல்ஸ் நிறுவனம் இழப்பீடாக ரூ.10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது.






