ஆட்சியில் பங்கு தருபவர்களுடன் அமமுக கூட்டணி- டிடிவி தினகரன் பேச்சு

டிடிவி தினகரன் கூறுவதைப்பார்த்தால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பார் என்று தெரிகிறது.
தஞ்சாவூர்,
தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், கூட்டணி குறித்து முடிவெடுக்க கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிகாரம் வழங்குவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசியதாவது:- பெரியார் வழி வந்தவர்கள் நாம். ஏழைகளுக்காகவே வாழ்ந்து, பொற்கால ஆட்சி தந்த எம்.ஜி.ஆர். வழிவந்தவர்கள் நாம். ஆண் ஆதிக்க உலகில், சரிநிகர் சமமாக இருந்து ஆட்சி செய்த ஜெயலலிதா வழிவந்தவர்கள் நாம். அவரது வழி வந்த நாம் எந்தவொரு தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும்.
இன்றைக்கு அமமுக இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி கூட்டணியாக, ஆட்சியமைக்கும் கூட்டணியாக இருக்கும் என்று இங்கே பேசிய நிர்வாகிகள் கூறினார்கள். ஆட்சியில் இருந்தபோதே நீங்கள் எல்லாம் என் பின்னால் வந்ததால்தான் இந்த இயக்கத்தை நடத்த முடிகிறது. நமக்கு யாரை கண்டு பயமும் இல்லை, பொறாமையும் இல்லை. அதனால்தான் கடந்த 8 ஆண்டுகளாக தெளிந்த நீரோடையாக உள்ளது. யாரிடமும் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், ஊழலற்ற ஆட்சி உருவாக அமமுக உறுதியாக இருக்கும்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறாததற்கு காரணம், ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்ற எனது முடிவால்தான்.இந்த தேர்தலில் நாம் கைகாட்டுபவர்தான் முதல்-அமைச்சராக வருவார் என்பது இயற்கையின் தீர்ப்பு. அதற்காக யாரிடமும் சமரசம் செய்துகொள்ளமாட்டேன். ஏதேதோ செய்திகளை, வதந்திகளை கிளப்புவார்கள். நம்ப வேண்டாம். நமது உயரம் நமக்கு தெரியும். உங்கள் மனஓட்டம் எனக்கு தெரியும். கூட்டணியில் இடம்பெற்று 80 சதவீதம் பேர் சட்டசபைக்கு செல்வோம்.
தேர்தலுக்கு தயாராக இருங்கள். கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். எந்த கூட்டணியில் சென்றால் எவ்வளவுதான் சீட் கிடைக்கும் என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். தேர்தல் நேரத்தில் யார் துரோகி, யார் நண்பன் என்பது என் கண்களுக்கு தெரியாது. மக்களின் நலனுக்காக முடிவெடுப்பேன். கவுரவமான இடம்பெற்று கூட்டணியில் ஆட்சி அமைப்போம். அமமுகவினர் அமைச்சராக இடம்பெறுவீர்கள். ஏற்கனவே, 3 ஆயிரம் பேர் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளனர். கவுரவமான இடங்களை தருபவர்கள், ஆட்சியில் பங்குதருபவர்களுடன் கூட்டணி அமைத்து முழுமையான வெற்றி பெறுவோம். கூட்டணி அமைக்கும் முன் உங்களிடம் சொல்விட்டுத்தான் முடிவெடுப்பேன். நல்ல முடிவு எடுப்பேன்” இவ்வாறு அவர் பேசினார். டிடிவி தினகரன் கூறுவதைப்பார்த்தால், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பார் என்று தெரிகிறது.






