அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை: டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்


அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதிக்கவில்லை:   டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்
x

டாக்டர் அன்புமணி ராமதாசின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்று டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கல்வி, சமூகநீதி உள்பட 10 உரிமைகளை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு நடைபயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் நேற்று முன்தினம் தொடங்கினார். அவருடைய இந்த சுற்றுப்பயணத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

கட்சியின் நிறுவனரான எனது அனுமதி இல்லாமல் பா.ம.க. கொடியை பயன்படுத்தி நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்புமணியின் இந்த பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கடிதம் அளிக்கப்பட்டது.

அதே வேளையில், திட்டமிட்டப்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது பயணத்தை தொடங்கிய நிலையில், அவரது பயணத்துக்கு போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை விதித்ததாக நேற்று முன்தினம் இரவு தகவல்கள் வெளியானது. இதுதொடர்பான சுற்றறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், சுற்றறிக்கை தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நடைபயணத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று பா.ம.க. நிறுவனர் சார்பில் அளிக்கப்பட்ட புகார் கடிதத்தில் கூறப்பட்ட சாரம்சத்தை சுட்டிக்காட்டி அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கவும், சட்டம்-ஒழுங்கு பாதிக்காத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டது' என்றார்.

1 More update

Next Story