மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - ராமதாஸ்


மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் - ராமதாஸ்
x
தினத்தந்தி 23 Oct 2025 12:15 AM IST (Updated: 23 Oct 2025 12:15 AM IST)
t-max-icont-min-icon

உரிய காலத்தில் நெல் பயிர்களை கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு இந்த பாதிப்பு வந்திருக்காது.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது பெய்து வருகின்ற தொடர் கனமழையின் காரணமாகவும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும் விவசாயிகள் பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி உள்ளன. விவசாயிகள் பயிரிட்ட மக்காச்சோளம் போன்ற பயிர்களை அறுவடை செய்ய முடியாமலும் முளைப்பு திறன் ஏற்பட்டு உள்ளது. உளுந்து மற்றும் பயிர் வகை பயிர்கள் விதைத்து நீர் தேக்கத்தின் காரணமாக முளைப்புத் திறனை இழந்தும் உள்ளன. வாழை சாகுபடியில் பல இடங்களில் கனமழை காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து உள்ளன, தமிழகத்தில் பெரும்பான்மையான பகுதிகளில் விவசாயிகள் விளை பயிர்கள் தொடர் கனமழையின் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகி பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

சில இடங்களில் மழையின் காரணமாக சுவர்கள் இடிந்து விழுந்து பலரின் குடியிருப்பு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வளர்த்து வருகின்ற கால்நடைகளுக்கு மழை காலங்களில் போதிய ஊட்டச்சத்து உணவுகள் கிடைக்காமலும் போதிய கொட்டகை இல்லாத காரணத்தால் மழையில் நனைந்தும் உள்ளன. இதனால் கால்நடைகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் இருக்க உரிய தடுப்பு நடவடிக்கைகளை கால்நடைத்துறை மூலம் தமிழக அரசுமேற்கொள்ள வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் முன் பருவ காலத்தில் பயிரிடப்பட்ட நெல் பயிர்களை நெல் கொள்முதல் நிலையங்கள் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுத்திய காரணத்தால் விவசாயிகளின் நெல் பயிர்கள் கனமழையில் நனைந்து முளைப்புத்திறனை பெற்றுள்ளன. இது கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் ஏற்பட்டதாகும். உரிய காலத்தில் நெல் பயிர்களை கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் விவசாயிகளுக்கு இந்த பாதிப்பு வந்திருக்காது.

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களை கணக்கு எடுத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும்.

டெல்டா மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படாத நெற்பயிர்களை உடனடியாக உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யப்பட வேண்டும். பாதிப்புக்கு உள்ளான நெற்பயிர்களையும் தமிழக அரசு உடனே கொள்முதல் செய்து பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்கிட வேண்டும். கன மழை காரணமாக மீன்பிடி தொழிலில் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் உரிய நிவாரணங்கள் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story