திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் இரவில் தங்குவதற்கு தடையா? - போலீஸ் விளக்கம்

பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருச்செந்தூர்,
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருவிழா காலங்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இதுதவிர பவுர்ணமி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இவ்வாறு வரும் பக்தர்கள் இரவில் கடற்கரையில் தங்கி அதிகாலையில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார், இரவு-பகல் என தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் இரவில் பக்தர்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக நேற்று தகவல்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் எந்தவித அறிவிப்பும் செய்யப்படவில்லை. இதனால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதையடுத்து திருச்செந்தூர் கோவில் போலீசார் சார்பில் நேற்று மாலையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பருவமழை மற்றும் திடீர் கனமழை நேரத்தில் மட்டும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடற்கரையில் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாதுகாப்பாக தங்குவதற்கு அறிவுறுத்தப்படுகிறது. எனவே, தற்போது கடற்கரை பகுதியில் தங்குவதற்கு எந்த விதமான தடையும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






