ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிறையில் இருந்த 3 பேருக்கு ஜாமீன்

மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுக்கு வரும் 28-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி தனது வீட்டிற்கு அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ1 குற்றவாளி நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட 27 பேரை கைது செய்துள்ளனர். 2 பேர் வெளிநாட்டில் தலைமறைவாகி உள்ளதால், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்த செம்பியம் போலீசார் வழக்கின் குற்றப்பத்திரிகையை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தற்போது, இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த 3 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதை சுட்டிகாட்டி சதீஷ், சிவா, ஹரிஹரன் ஆகிய 3 பேருக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் ஏ1 குற்றவாளி நாகேந்திரன் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கும் முன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மறைந்த ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுக்கு வரும் 28ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நேற்றுடன் ஜாமின் முடிந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து தந்தையின் மரணத்தை தொடர்ந்த காரியங்களுக்காக 15 நாட்கள் ஜாமீன் வழங்க அவர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்ய, வரும் 28ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது






