ராணுவத்துக்கு ஆட்கள் தேர்வு - நாகப்பட்டினத்தில் அடுத்த மாதம் நடக்கிறது

நாகப்பட்டினத்தில் உள்ள கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அக்னிவீரர்கள் தேர்வு நடக்கிறது.
திருச்சி,
திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் நாகப்பட்டினத்தில் உள்ள கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை அக்னிவீரர்கள் தேர்வு நடக்கிறது.
இந்த பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்த திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளலாம்.
நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அடுத்த மாதம் 18-ந்தேதியும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 19-ந்தேதியும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 20-ந்தேதியும் தேர்வு நடக்கிறது.
21-ந்தேதி கரூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், 21 மற்றும் 22-ந்தேதி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 22 மற்றும் 23-ந்தேதிகளில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும், 23 மற்றும் 24-ந்தேதிகளில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், 24 மற்றும் 25-ந்தேதிகளில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேர்வு நடத்தப்படுகிறது.ஆட்சேர்ப்பு வெளிப்படையாக நடைபெறும். விண்ணப்பதாரர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






