பயணிகளின் கவனத்திற்கு.. திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


பயணிகளின் கவனத்திற்கு.. திருச்சி வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
x

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில், 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை சிவகங்கை வழியாக திருச்சி செல்லும்.

திருச்சி,

மதுரை கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன. அதன்படி வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (எண்:16848) விருதுநகரில் இருந்து மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி வந்து மயிலாடுதுறைக்கு செல்லும். அந்த நாட்களில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை வழியாக செல்லாது.

இதுபோல் கன்னியாகுமரி-ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்:12666) 19-ந்தேதி விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.

குருவாயூர் எக்ஸ்பிரஸ்

ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கத்ரா ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் (எண்:16788) திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாக விருதுநகர் சென்று நெல்லைக்கு புறப்படும். அன்று அந்த ரெயில் திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை வழியாக செல்லாது.

மேலும் குருவாயூரில் இருந்து வருகிற 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண்:16128) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, சோழவந்தான், கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல், மணப்பாறை வழியாக செல்லாது.

அதுபோல் வருகிற 18-ந் தேதி காலை 5.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (எண்:07229) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, கொடைக்கானல்ரோடு, திண்டுக்கல் வழியாக செல்லாது.

புறப்படும் நேரம் மாற்றம்

மேலும் 20-ந்தேதி காலை 6.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் (எண்:16352) விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி வந்து செல்லும். அன்று மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது.

அத்துடன் நாளை (புதன்கிழமை) மதுரையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட வேண்டிய கச்சிக்குடா சிறப்பு கட்டண ரெயில் (எண்:07192) 80 நிமிடங்கள் தாமதமாக பகல் 12 மணிக்கு புறப்படும். வருகிற 18-ந்தேதி காலை 9.10 ராமேசுவரத்தில் இருந்து சரளப்பள்ளி சிறப்பு கட்டண ரெயில் (எண்:07696) 9 மணி நேரம் 50 நிமிடங்கள் தாமதமாக இரவு 9 மணிக்கு புறப்படும்.

இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story