இந்தியில் மசோதாக்களின் பெயர்கள்: ப.சிதம்பரம் கண்டனம்

இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை எதிர்க்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மசோதாக்களின் பெயர்களை இந்தியில் வைப்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெலியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
மசோதாக்களின் பெயர்களை இந்தியில் வைப்பது இந்தி பேசாத மக்களை அவமரியாதை செய்வதாகும். நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் மசோதாக்களின் தலைப்பில் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட இந்தி வார்த்தைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை எதிர்க்கிறேன்.
மசோதாவின் தலைப்பை ஆங்கில பதிப்பில் ஆங்கில வார்த்தைகளிலும், இந்தி பதிப்பில் இந்தி வார்த்தைகளிலும் எழுதுவதே நடைமுறையாக இருந்தது. 75 ஆண்டுகால இந்த நடைமுறையில் யாரும் குறுக்கிடாத போது, ஏன் ஒரு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்?.
இந்தி பேசாத மக்களால் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்ட இந்தி வார்த்தைகளில் உள்ள தலைப்புகளை கொண்ட மசோதாவை அடையாளம் காண முடியாது. அவர்களால், அந்த வார்த்தையை உச்சரிக்கவும் முடியாது. இந்த மாற்றம் இந்தி பேசாத மக்களுக்கும், இந்தி தவிர வேறு அலுவல் மொழியைக் கொண்ட மாநிலங்களுக்கும் அவமானமாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






