‘கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.விற்கு இல்லை’ - நயினார் நாகேந்திரன்

முதல்-அமைச்சர் தனது கடமையில் இருந்து தவறிவிட்டார் என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இந்த சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உயிர்களை பாதுகாத்திருக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. முதல்-அமைச்சர் தனது கடமையில் இருந்து தவறிவிட்டார்.
கரூர் சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆன பிறகு, கமல்ஹாசன் இப்போது சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறை தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று கூறுகிறார் என்றால், முதல்-அமைச்சர் தன்னிடம் சொன்னதை அவர் அங்கு போய் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
கரூரில் அன்றைய தினம் நிலவிய பதற்றமான சூழலில், ஒருவேளை விஜய் அங்கு சென்றிருந்தால், அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம். அவ்வாறு எதுவும் நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? 41 பேரின் உயிரை அரசால் பாதுகாக்க முடியவில்லை, விஜய்யின் உயிரை அவர்களால் பாதுகாக்க முடியுமா?”
இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.






