கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு


கேளம்பாக்கம் அருகே விபத்துக்குள்ளான பயிற்சி விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
x

கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது. பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார்.

திருப்போரூர்,

தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து விமானிகள் சிறிய விமானத்தில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம் அதேபோல் நேற்று பகல் 1.30 மணிக்கு “பிளேட்டஸ் பி.சி 7” பெயருடைய ஒரு சிறிய ரக பயிற்சி விமானம் புறப்பட்டது. விமானி சுபம் விமானத்தை இயக்கினார். பகல் 2 மணி அளவில் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்போரூர் கழிவெளி பகுதியில் வான்வெளியில் விமானி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானி விமானத்தை தரை இறக்க முயற்சித்தார். சரியான விமான தளம் இல்லாததால், திருப்போரூர் புறவழிச்சாலையில் இறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானி சுபம் பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். விமானம் தாறுமாறாக இயங்கிய நிலையில் கேளம்பாக்கத்தை அடுத்த திருப்போரூர் பகுதியில் மேலே சுற்றியபடி திருப்போரூர் -நெம்மேலி சாலையில் உள்ள உப்பு பேக்கிங் செய்யும் தனியார் தொழிற்சாலை கட்டிடத்துக்கு அருகாமையில் சேறும் சகதியுமான இடத்தில் விழுந்து நொறுங்கியது.

அதன் பாகங்கள் ஆங்காங்கே சிதறின. விமானம் விழுந்ததில் அந்த தொழிற்சாலையில் உப்பை கழுவ பயன்படுத்தப்படும் சுத்திகரிப்பு மையம் சேதமடைந்து. தொழிற்சாலையின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர் அலறியடித்து வெளியே ஓடினர். விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அதன் பாகங்கள் சிதறின.

விமானம் விழுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் தண்டலம் புறவழிச்சாலை பகுதியில் பாராசூட் மூலம் குதித்த விமானி சுபம் என்பவரை பொதுமக்கள் மீட்க முயன்றனர். அவருக்கு சரியாக தமிழ் தெரியாததால் தன்னை யாரும் தொல்லை செய்ய வேண்டாம் என்றும், விமானப்படை ஏர் ஆம்புலன்ஸ் வரும் என ஆங்கிலத்தில் கூறியதையடுத்து தண்டலம் கிராம இளைஞர்கள் பாராசூட்டை குடை போல் விரித்து அவருக்கு நிழலை ஏற்படுத்தினர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில் அதில் ஏற விமானி மறுத்துவிட்டார். இது குறித்து தாம்பரம் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒரு சிறிய ரக விமானம் வந்தது.

ஹெலிகாப்டரில் வந்த2 விமானப்படை வீரர்கள் விமானி விழுந்து கிடந்த புறவழிச்சாலையில் ஹெலிகாப்டரை இறக்கி விமானத்தில் இருந்த ஸ்ட்ரெச்சர் மூலம் விமானி சுபத்தை தாம்பரம் விமானப்படை தளத்துக்கு கொண்டு சென்றனர். அங்குஅவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை தாம்பரம் விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் விமானம் விழுந்த இடத்திற்கு அருகில் யாரும் செல்லாதவாறு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று (நவ.14ம் தேதி) விபத்துக்குள்ளான விமானப்படை விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சிதறிய பாகங்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது

1 More update

Next Story